ஒரு பதவி ஒரு பென்சன் – ஒரு பதவி ஒரு பென்சன் என்றால் என்ன?
அமுல்படுத்த அரசு ஏன் தயங்குகிறது?
திட்டத்தின் தற்போதைய உண்மை நிலை என்ன?
OROP-யின் நியாயங்கள் – OROP பற்றிய உண்மை நிலை என்ன..?
திட்டம் நடைமுறைபடுத்த அரசு தயங்குவதன் காரணங்கள் என்ன?
பொருளாதார இடர்பாடு மட்டும் தான் காரணமா..?
சிவிலியன் மற்றும் CRPF, இத்திட்டத்தை கேட்பதற்கான முகாந்திரம் இல்லை என IESM கூறுகிறது.
“உடலும் உள்ளமும் துடிப்புடன் செயல்படும் நேரத்தை நாட்டின் பாதுகாப்புக்காக அர்ப்பணித்து விட்டு, உடல் தளரத் தொடங்கிய நேரத்தில் பணி ஓய்வு பெரும் நம் இந்திய வீரர்களின் நியாயமான கோரிக்கை தான் OROP”.
கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோரிக்கையினை மேலுந்தவாரியாக பார்த்தால் நியாயமில்லாதது போன்று கூட தோன்றும்…ஆனால் கோரிக்கையின் உள்ளார்ந்த அர்த்தம் புரிந்தால், அமுல்படுத்த வேண்டிய அவசியம் தெரியும்.
ஒருவர் அரசு பணியில் சேர்த்ததும் பொருளாதார பாதுகாப்பை 57-60 வயது வரை பெறுகிறார். 60 வயது வரை அரசு தரும் சம்பளம், பதவி உயர்வு பெற்று, அதன் பின் வாழ்நாள் முழுவதும் பென்சன் பெறுகிறார். தரைப்படை, விமானப்படை, கடற்படை சேர்ந்த ஆயுதப்படை வீரர்கள் 37 வயதில் ஓய்வு பெற்று மிக சொற்பமான பென்சன் தொகையினை பெறுகிறார்கள். இந்த இரு பிரிவினரையும் ஒரே தட்டில் வைத்து எடை போடுவது நியாயமா என்பதே இந்திய ஜவான்களின் தாழ்மையான கருத்து.
ஒருவரது வாழ்க்கையில் கடமைகளும், பொறுப்புகளும் அதிகம் உள்ள காலம் 40 லிருந்து 60 வயது வரை தான். கவனமாக அடியெடுத்து வைக்கவேண்டிய இந்த காலகட்டத்தில் தான் நாங்கள் நட்டாற்றில் விடப்படுகிறோம் என வருத்தப்படுகிறார்கள். காரணம் மிக சொற்ப பென்சன் தொகையுடன் கட்டாய ஓய்வு.
OROP என்ற கோரிக்கையின் மறுபக்கம் இருப்பது 37 வயதில் கட்டாய பணி ஓய்வு. காரணம், நம் நாட்டின் ராணுவம் இளமையுடன், துடிப்புடன் இருக்க வேண்டும். இந்திய ராணுவத்தில் 15-லிருந்து 17 வருட அனுபவத்திற்கு பின் ஓய்வு பெறுபவர்களில், 90 சதவீதம் பேர் ஜவான்கள் என்பது குறுப்பிடத்தக்கது.
குடும்பத்தினரை பிரிந்து வாடும் நிலை, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பணிசுமை, கடுமையான விதிமுறை காரணமாக மன அழுத்தம், பணித்தளத்தில் போரில் அதிக உயிர்சேதம், அடிப்படை உரிமைகள் பறிப்பு போன்ற எண்ணற்ற துயரங்களை கொண்டது தான் இராணுவத்தினரின் பணி.
இத்துடன் 37 வயதில் கட்டாய பணி ஓய்வு. குறைந்த அளவு பென்சன் தொகைக்கான காரணம் பணி காலம் குறைவு. ஒரே வயது கொண்ட இருவர், ஒருவர் மத்திய அரசு பணியிலும், மற்றவர் மிலிடரி சர்வீஸ்ல் சேர்ந்ததாக அனுமானித்தால், 40 மற்றும் 60 வயதில் இருவரின் பொருளாதார நிலையினை ஒப்பிட்டு பார்த்தல் புரியும்.
உடல் ஊனமில்லாமல் பணி ஓய்வு பெரும் சிப்பாய்களுக்கே அரசு பணியில் சேர்வதற்கான வாய்ப்பு குறைவு. மற்றவர்களின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
OROP என்றால் என்ன என்பதை இப்போது படியுங்கள்..!
ராணுவத்தில் பணிபுரியும் ஒருவர் எந்த தேதியில் ஓய்வு பெறுகிறார் என்பதை கணக்கில் கொள்ளாமல், அவர் வகிக்கும் பதவி மற்றும் பணிபுரியும் காலம் இரண்டையும் மட்டும் கணக்கில் கொண்டு ஒரே சீரான பென்சன் வழங்கும் திட்டம். அத்துடன், வருங்காலங்களில் பென்சன் தொகை உயர்த்தப்பட்டால், அது முன்னாள் பென்சன்தாரர்களுக்கும் பொருந்தும் என்பதே இக்கோரிக்கையின் முக்கிய அம்சம்.
சமீபத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை விட, முன்னாளில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மிக குறைந்த பென்சன் பெறுகிறார்கள் என்பதே இக் கோரிக்கைக்கான காரணம்.
ஒவ்வொரு சம்பள கமிசனுக்கும் உள்ள இடைவெளி பத்து ஆண்டுகள், அத்துடன் செலவு குறியீடு அடிப்படையில் கணிசமான அளவு பென்சன் தொகை உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்படும் பென்சன் தொகை முன்னாள் ராணுவத்தினருக்கும் தரப்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
அரசு பணியில் உள்ளவர்களுக்கு சம்பளம் மற்றும் படிகள் திருத்தி அமைக்கவே சம்பள கமிசன்கள் அமைக்கப்படுகிறது. பணி ஓய்வு பெற்றவர்களுக்காக அல்ல, என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. இங்கு பணி ஓய்வு என்று குறிப்பிட்டது 57(CRPFPolice) மற்றும் 60(CGEmployees) வயது பூர்த்தி அடைந்தவர்களைத் தான். ஆனால், 37 வயதில் கட்டாய பணி ஓய்வு பெற்றவர்களின் நிலையினை, 3 அல்லது 4 சம்பள கமிசன் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பள உயர்வினை பெற்று 60 வயதில் ஓய்வு பெற்றவர்களுடன் எங்களை எப்படி ஒப்பிடலாம் என்பதே அவர்களின் வாதம்.
தற்போது அமுலில் உள்ள 6வது சம்பள கமிசன் பரிந்துரைகளின் அடிப்படையில், பதவி மற்றும் பணிக்காலம் இரண்டையும் மட்டும் கணக்கிட்டு, அனைத்து முன்னாள் ராணுவத்தினருக்கும் பென்சன் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்பதே 25 லட்சம் முன்னாள் இராணுவத்தினர் எதிர்ப்பார்ப்பு.
திட்ட செலவு எவ்வளவு : பாதுகாப்பு துறை இத் திட்டம் நிறைவேற்ற 8300 கோடி செலவாகும் என மத்திய நிதி அமைச்சகத்திற்கு 17 February 2015 அன்று அனுப்பியது. ஏற்கனவே ஓய்வூதியத்திற்கு செலவு செய்யப்படும் நிதியோடு மொத்தம் 51000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
கோரிக்கை வலுப்பெற்றது எப்போது? : 4வது சம்பள கமிசன் பரிந்துரைக்குப் பின், சிறு சல சலப்புடன் தொடங்கிய இந்த கோரிக்கை, 6-வது சம்பள கமிசன் அமைக்கப்பட்ட போதே தீவிரமானது. 6-வது சம்பள கமிசன் மட்டுமல்ல அதற்கு முந்தைய சம்பள கமிசன்களிலும், இந்தியாவின் மிகப்பெரிய ஊழியர்களை கொண்ட பிரிவான படைத்துறையினர் சார்பாக யாரும் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை.
2004-ல் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் OROP குறித்து உறுதிமொழி அளித்தது
2008-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இத்திட்டத்தை நிராகரித்த போது, இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீர்கள், IESM என்ற ஓர் அமைப்பின் கீழ் ஒன்று திரண்டு, தங்களின் ரத்த கையெழுத்தோடு பதங்கங்களை இந்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்கள்.
அதற்குப்பின், தங்களது கோரிக்கையின் நியாயங்களை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருக்கு விரிவாக எடுத்துக்கூறி அமுல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. IESM அமைதியான முறையில் பேரணி மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறது.
2013-ல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராஜீவ் சந்திரசேகர் மற்றும் IESM கொடுத்த நெருக்கடியின் காரணமாக, பாதுகாப்பு துறை சார்ந்த பாராளுமன்ற நிலைக்குழு ஏற்றுக்கொண்டது.
2014 பொது தேர்தலின் போது மோடி பல இடங்களில் தாமாக முன்வந்து உறுதி மொழி கொடுத்தார். NDA-BJP அரசு ஆட்சிக்கு வந்த பின் 2014 ஜூலை பட்ஜெட் உரையில் OROP பற்றி குறிப்பிடப்பட்டது.
2015 May 25 அன்று மதுராவில், ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற பேரணியில் மோடி அறிவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் மோடி அவர்கள் ஒரு வார்த்தை கூட OROP திட்டம் குறித்து பேசவில்லை.
பிரதமர், நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என பலரும் இத்திட்டம் அமுல் ஆவது குறித்த பேச்சுக்கள், ராணுவ வீரர்கள் மத்தியில் நம்பிக்கையினை வளர்த்தன. ஆனால், மாதங்கள் சென்றதே அன்றி திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
தேர்தலின் போது பிரதமர் கொடுத்த அழுத்தமான வாக்குறுதி, ஒருவருடம் முடிந்த பின்பும் நடைமுறை படுத்த முடியாமல் காலம் தாழ்த்தும் செயல், கூடவே மிக “சிக்கலான விஷயம்” என கூறியது. இவைகள் தான் தபோதைய போராட்டத்திற்கான காரணங்கள்.
கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கும் மேல் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. அத்துடன், நாட்டில் பல இடங்களில் முன்னாள் ராணுவத்தினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
OROP திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்ற ஒரே வார்த்தையை தான் அரசு மீண்டும், மீண்டும் முன்மொழிகிறது. முன்னாள் ராணுவத்தினர் அமைப்போ, அமுல்படுத்தப்படும் தேதியினை குறுப்பிடுங்கள் என்கின்றனர்.
திட்டம் நிறைவேறுமா அல்லது போராட்டம் தொடருமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Leave a Reply