உரிமைகோராத பிஎப் பணத்தை பயன்படுத்த எதிர்ப்பு: கூட்டத்திலிருந்து தொழிலாளர் சங்கங்கள் வெளிநடப்பு
புதுடெல்லி: உரிமை கோராத பிஎப் பணத்தை மூத்த குடிமக்கள் நலத்திட்ட நிதிக்கு பயன்படுத்த தொழிலாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பிஎப் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன. தொழிலாளர்களின் நிதியை நிர்வகித்து வரும் பிஎப் நிறுவனம், இந்த நிதியை பங்குச்சந்தை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது. தற்போது 5 சதவீத தொகை முதலீடு செய்யப்படுகிறது. இதை 10 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக முடிவெடுக்க வருங்கால வைப்பு நிதியின் மத்திய அறங்காவலர் கூட்டம் நேற்று கூடியது. இதில், இந்தியாவில் தற்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் பிஎப் பணம் முதலீடு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
உலக அளவில் இந்த சராசரி முதலீட்டு அளவு 30 சதவீதமாகும். எனவே, இதை 10 சதவீதமாக உயர்த்தலாம் என பரிந்துரைத்திருந்தது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தொழிலாளர் சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இதில் உரிமை கோராத பிஎப் நிதியை மூத்த குடிமக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியாக பயன்படுத்த வேண்டும். உரிமை கோரப்படாமல் ஏழு ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் பிஎப் கணக்கில் உள்ள நிதி இதில் சேர்க்கப்படும் என்ற பரிந்துரை துணை தீர்மானமாக முன்வைக்கப்பட்டது.
இதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து ஏஐடியுசி, பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘‘மத்திய அரசின் இந்த முடிவு சட்ட ரீதியாக ஏற்கத்தக்கதல்ல. உச்ச நீதிமன்றமும் இந்த முடிவை நிராகரித்து விடும். தொழிலாளர்கள் தங்களது பிஎப் பணத்தை எப்போது வேண்டுமானாலும் கோரலாம். இதற்கு காலஅளவு கூடாது. அப்படியிருக்கும்போது, ஏழு ஆண்டு செயல்படாத கணக்கில் இருந்து பணத்தை வேறு நலத்திட்டத்துக்கு பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்’’ என தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்ததும், பண்டாரு தத்தாத்ரேயா தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொழிலாளர்கள், நிதியை பயன்படுத்தும் முடிவு தோல்வியடைந்தால் மத்திய அறக்கட்டளை குழு உச்ச நீதிமன்றத்தை நாடக்கூடும். எனவே மத்திய அரசே இதில் முடிவு எடுத்து தீர்வு காண வேண்டும் என கோரினர். இதற்கு அமைச்சர் உறுதி அளித்த பிறகு தொழிலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Source : dinakaran
Leave a Reply